துள்ளித் திரிந்த காலங்கள் - என்
சொர்க்க வாழ்வின் வசந்தங்கள்
பள்ளிப் பிராயப் பொழுதிலே - உன்
பார்வைப் படத் துடித்தேனே!
எள்ளி நகையாடிச் சிரித்தே - என்னை
ஏளனம் செய்திட்டோர் ஏராளம்
அள்ளி அணைத்திடத் தோணும் - நீ
ஆறுதல் கூறும் போதினிலே!
வடமில்லா தேராய் ஆடிய என்னை
நிலைநிறுத்தி நிற்க வைத்தாய்
தடத்தில் செல்லும் வாகனமாய் - உன்
காலடிதனில் நடக்க வைத்தாய்
நடத்தை தனை மாற்றி வைத்து
நல்லவனாய் மாற்றி விட்டாய்
குடத்தில் இட்ட விளக்காய் இருந்தென்னை
குன்றின் மீதேறி வைத்தாய்
தாவணி காற்றிலே ஆட - நான்
தாளத்துடன் பின்பாட்டு பாட
லாவணி பாடி மகிழ்ந்தோமே - நீயும்
நானும் இணைந்திடுவோம் என்றெண்ணி
ஆவணி மாதத் திருமணமாம் - உன்
அழைப்பிதழை அனுப்பி வைத்தாய்
பூமணி நீயும் என்நெஞ்சில் - பாயும்
ஈட்டியால் குத்தி விட்டாய்.
கண்ணிலே தெரியுது காலம் - என்
கனவுகளில் உன் நினைவுக்கோலம்
எண்ணிக் கழிக்கிறேன் நினைவுகளில் - நீ
என்னை வருடுகிறாய் கனவுகளில்
விண்ணில் தோன்றும் விண்மீன்களில்
விடிவெள்ளி போன்று ஒளிருகிறாய்
மண்ணிலே தெரியுது வானம் - உன்
மனதில் தெரியாமல் போவேனோ..!
rishvan.com

0 கருத்துரைகள்:
Post a Comment